Saturday, August 8, 2009

முஸ்லிம்கள் இன்று தற்கொலை தாக்குதல் நடத்துகின்றார்கள் இது இஸ்லாத்தில் கூடுமா?






இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல் ஒரு அலசல்!



தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூ- கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும் ஆனால் தனது உடல் இழைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப் பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப் பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ""கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன.

அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப் பட்டு பின்னர் தடைசெய்யப் பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸôகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொது மக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

நாயை கல்லால் அடித்தால் அந்த நாய் கல்லை போய் கடிக்காது அடித்தவனைத்தான் கடிக்கும் கேவலம் அந்த நாய்க்கு உள்ள அறிவு கூடவா மனிதனுக்கு இல்லை?
மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப் படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப் படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.
மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?


ஆதாம் ஹவ்வாவின் பிள்ளைகள் சகோதர சகோதரிகளுக்குள் திருமணம் செய்தது ஏன்?

ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர்களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

Sunday, August 2, 2009

கடவுள் ஏன் மனிதனாக அவதாரம் எடுக்கவில்லை?



கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும்.

இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன.

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது.

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?

இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது?

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

""நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்'' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும்.

போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

""கடவுள் மனிதனாக வரவே மாட்டான்'' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம்.

இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம்.

கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும்.

சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

a

Tuesday, July 28, 2009

குர்-ஆனில் இதயமே சிந்திப்பது போல் பல இடங்களில் வருகிறதே சிந்திப்பது எது மூளையா? இதயமா?


சிந்திப்பது எது மூளையா? இதயமா?

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?’என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.

சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதி-ருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உட-ன் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

""இதயத்தில் உனக்கு இடம் இல்லை'' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கே- செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.

இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், "மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் "கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிசானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி # உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

Tuesday, July 21, 2009

இஸ்லாமியர்களை மறுமை நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கும் சூரிய கிரகணம்




இஸ்லாத்தின் பார்வையில் சூரிய கரகனம்




சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும்.


கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்;
*சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ]
*நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ]
கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ]


கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும்.
*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ]


*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ]


கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்;
தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ]


ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்;
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ]


தொழும் முறை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ]


கிரகணம் விலகும் வரை தொழுதல்;
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ]
உரை நிகழ்த்துதல்;


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ]


அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக!

Sunday, July 12, 2009

அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


இறைவனை அவன் இவன் என்று சொல்லலாமா?




இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

"அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் "ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

"அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு "ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக "ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.


அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் "ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ'’என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது ""பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது'' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் "HE" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு "THEY" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக "THEY" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி "அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.

மரியாதை கொடுக்காத போது அவன் எனவும்,

மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும்,

அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும்
பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் "அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான்

கம்பன் கூறுகிறான்

ராமன் வில்லை ஒடித்தான்

என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது "அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது "நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது "அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.

கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

கடவுளை "அவன்' என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்திற்காகவும் முஸ்லிம்கள் இறைவனை "அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

""அல்லாஹ் கூறினார்கள்'' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.


அல்லாஹ்வை "அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.

மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை "அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.


அல்லாஹ்வை "அவர்' என்றோ "நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

Saturday, July 4, 2009

இஸ்லாத்தின் பார்வையில் ஓரினச்சேர்க்கை


ஓரினச்சேர்க்கை ஓர் அலசல்!

ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி,இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]

இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَநிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]

அழிக்க வந்த அமரர்களையும்[வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;

ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌஅவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]

قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ

அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)

மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍபின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)

மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும்.

Tuesday, June 30, 2009

மரியாதைக்காகவும் ஆசீர்வாதம் பெறுகிறோம் என்றும் பிறர் காலில் விழுவது இஸ்லாத்தில் கூடுமா?




பிறர் காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ""இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ""நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ""(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். ""மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ""ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ""எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

786 இந்த எண்ணுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம் இதை இஸ்லாமியர்கள் பயன் படுத்துவது ஏன்?



786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.

“"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாக கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார்.அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும் முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் “"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் “"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

Friday, June 26, 2009

இஸ்லாமியர்கள் வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து வீடு கட்டுவது கட்டிய வீட்டை மாற்றி அமைப்பது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?


இஸ்லாத்தின் பார்வையில் வாஸ்த்து சாஸ்த்திரம்?

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல வாஸ்த்து சாஸ்த்திரத்தை நம்பும் எல்லோருமே அறிவீனர்கள் தான்.


முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை # தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் "இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இதுதான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

""ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!'' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?

நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங் கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப் படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக் குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். முஸ்லிம்கள் கணக்கில் உலகில் தான் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்-ம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

Monday, June 22, 2009

குர் ஆன் அரபி மொழியில் வழங்கப்பட்டதன் காரணம் என்ன? ஏன் அரபி மொழிக்கு மட்டும் அந்த சிறப்பு?


திருக் குர்-ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

மனிதர்களில்ருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(குர்ஆன் 14:4)

ஈசா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.

(நூல்: அஹ்மத் 22391)

Monday, June 15, 2009

காஃபத்துல்லாவை காப்பதற்க்காக இறைவன் அனுப்பிய அபாபீல் பறவையை பாபர் மஸ்ஜிதை இடிக்கும்போது இறைவன் ஏன் அனுப்பி வைக்க வில்லை?

பாபரி மஸ்ஜிதை காக்க, காஃபத்துல்லாவை காத்த அபாபீல் பறவை ஏன் வரவில்லை?
இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.
கஃபாவும் அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஃபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று திருமறைக் குர்ஆன் உறுதி மொழி அளிக்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(திருக் குர்ஆன் 28:57)

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
(திருக் குர்ஆன் 29:67)

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள் ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(திருக் குர்ஆன் 3:97)

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
(திருக் குர்ஆன் 14:35)

யுக முடிவு நாளின் போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஃபாவை அழிப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன் அறிவிப்பு உள்ளது. (புகாரி 1591, 1596, )

அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஃபாவைத் தகர்க்க முயன்றால் யானைப் படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். ( 22:40)

பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.

ஆனால் அநியாயமாக இறையில்லங்களை இடித்தவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் இழிவு காத்திருக்கிறது.இறைவனின் பிடி மிகவும் மோசமானது.

Sunday, June 14, 2009

கடலில் இறந்து போனவர்களுக்கு கப்ரு வேதனை உண்டா?

கடல் பயணத்தில் இறந்தவர்கள் மட்டுமல்ல, உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர். காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்ய இறைவன் காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் அவனது நியாயத்லிதிற்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரைமறை (வாழ்க்கை) உண்டு. என்ற (அல்குர்ஆன்) வசனப்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

மேலும் கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அதே இடத்தில் தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்மாக்கள் மரணிக்கும் போதும், மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின் போதம், அல்லாஹ் கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தன் வசம் வைத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையும் வைத்துள்ளான் என்பது தெளிவு. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும் கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழ மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே. இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.

யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ அவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் மரணிக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது அவனுக்குச் சிரமமல்ல.கடலில் மீன் தின்று விழுங்கினாலும் கூட தவறு செய்திருந்தால் இறைவனின் வேதனையிலிருந்து தப்பமுடியாது.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்வி-ருந்து எவரும் விதிவிலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

Saturday, June 6, 2009

மரியாதை என்ற பெயரில் மனிதன் மனிதனுக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்தலாமா


மரியாதை நிமித்தமாக பிறருக்காக எழுந்து நிற்கலாமா?




வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம்.

மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப் பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸýபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ""அமருங்கள்'' என்றனர். ""தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ர-) கூறினார்கள்.

நூல்கள்: திர்மிதி 2769 அபூதாவூத் 4552


மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ""பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்
.

யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நான் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

Tuesday, June 2, 2009

அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் என்கிறீர்கள் அப்பேற்பட்ட வல்லமையுடைய இறைவனுக்கு வானத்தையும் பூமியையும் படைக்க ஏன் ஆறு நாள் தேவைப்பட்டது?


வானத்தையும், பூமியையும் படைக்க அல்லாஹ் ஆறு நாள் எடுத்தது ஏன்?

சரியான முறையில் புரிந்து கொண்டால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள். ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் நினைத்தால் இரண்டே மாதத்தில் கட்டி விடக்கூடிய அளவுக்குச் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் சக்தி இருந்தும் ஒரு வீட்டை இரண்டு வருடங்களில் கட்டுகிறீர்கள் என்றால் இரண்டு மாதங்களில் உங்களால் கட்ட முடியாது என்று கூற மாட்டோம்.

ஒரு நாளில் நம்மால் செய்ய முடியும் காரியத்தை ஐந்து நாட்களில் செய்தால் ஒரு நாளில் செய்ய நமக்குச் சக்தியில்லை என்று கூற முடியாது.

ஐம்பது கிலோ எடையைத் தூக்க முடிந்த நீங்கள் ஐந்து கிலோவாக பத்து தடவை தூக்கினால், உங்களுக்கு ஐம்பது கிலோவைத் தூக்க முடியாது என்று யாரும் கருத மாட்டார்கள்.

எந்த மனிதரும் தனக்கு எதையெல்லாம் செய்ய சக்தியுள்ளதோ அதையெல்லாம் செய்ய மாட்டார். தனக்கு எது விருப்பமானதோ அதைத் தான் செய்வார்.

அது போல தான் இறைவன் ஒரு பொருளை உருவாக்க எண்ணினால் ஆகு என்றாலே போதும்; அது ஆகிவிடும் என்பது அவனது சக்தியையும் ஆற்றலையும் கூறுகிறது. ஒவ்வொரு பொருளையும் ஆகு என்று கூறித் தான் படைத்தான் என்பது இதன் கருத்தல்ல. படைக்க அவனுக்கு முடியும் என்பது தான் இதன் கருத்து.

ஆயினும் ஒரு மனிதனை உருவாக்க அவன் பத்து மாதங்கள் எடுத்துக் கொள்வான். வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்களை எடுத்துக் கொள்வான். இதை விட அதிகமான கால அவகாசத்திலோ, குறைவான கால அவகாசத்திலோ வேறுசில காரியங்களைச் செய்வான். இப்படிச் செய்வதால் ஆகு எனக் கூறினால் ஆகும் என்ற அவனது வல்லமையை மறுத்ததாக ஆகாது.


வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? (குர்-ஆன் 32:4)

Thursday, May 28, 2009

அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ""தொழு! அறுத்துப் பலியிடு" என்ற கட்டளையும் உள்ளதே?


தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடு எதற்கு?


அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் ப-யிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது. (நூல்: முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!

""மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்'' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

Tuesday, May 26, 2009

"தவிடுபொடியான டார்வின் கொள்கை பாதாளக்குழியில் பரிணாம வளர்ச்சி"


மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது.

அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் "இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.

ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

""என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு'' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.

இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் # நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.

ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.

எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.


"மனிதர்களே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துக் கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லா அறிந்தவன்; நன்கறிபவன்." குர்ஆண் (49:13)

Sunday, May 24, 2009

இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்கிறார்களே இது இஸ்லாத்தில் கூடுமா?


செயற்கை முறையில் பெண்ணை கருத்தரிக்க செய்யலாமா?


"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.'' (அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர். இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளைநிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும் என்று தெளிவாக அளியலாம்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

""உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலங்கள்'' என்று இறைவன் கூறுவதி-ருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையில் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதை தெளிவாக அறிகிறோம்

Saturday, May 23, 2009

இஸ்லாத்தின் பார்வையில் கருணைக் கொலை.


கருணைக் கொலைக் கூடுமா?


போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர் மற்றும் ஏனைய உறுப்புக்களை இழந்தோர் சில சமயம் செத்துவிட்டால் நல்லது என்று கூறிவிடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை "கருணைக் கொலை' என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், ""இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்'' என்று கேட்கட்டும். இது நபிமொழி.

Monday, May 18, 2009

இஸ்லாத்தின் பார்வையில் இன்சூரன்ஸ்


இஸ்லாம் காப்பீடு (insurance) செய்வதை ஏன் தடுக்கிறது?


இன்ஷ்யூரன்ஸ் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் மூலதனங்கள் யாவும் வட்டி # லேவா # தேவிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது வட்டிக்குத் துணை செய்வதாகவே கொள்ளப்படும்.

மேலும் இன்ஷ்யூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு சூதாட்டமேயாகும். பலரிடம் பணம் வசூல் செய்து யார் இடையிலே இறந்து விடுகிறானோ அல்லது இழப்புக்கு ஆளாகிறானோ அவனுக்குப் பலரது பணமும் போய்ச் சேருகின்றது.

மற்ற சூதாட்டங்களில் வென்றவன் மற்றவர்களின் பணத்தை அடைகின்றான். இந்த சூதாட்டத்தில், இறந்தவனும், இழந்தவனும் அடைகின்றான். மனிதனுடைய உயிரையும், உடமையையும் பணயமாக வைத்து விளையாடப்படும் சூதாட்டத்திற்கு எந்த முஸ்லிமும் துணை போகக் கூடாது.

""ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.''
(அல்குர்ஆன் 5:90)

Sunday, May 17, 2009

இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மணைவி இத்தா இருக்கிறாள் அதே மணைவி இறந்தால் மட்டும் கணவன் இத்தா இருப்பதில்லையே ஏன்?


இஸ்லாம் மார்க்கத்தில் மணைவி இறந்து விட்டால் அடுத்த நாளே கணவன் மறுமணம் செய்து கொள்கிறான்.அது போன்ற சட்டம் பெண்ணிற்கு இல்ல்லையே ஏன்?


ஒரு ஆண் தன் மனைவியை இழந்துவிட்டால் உடனேயே அவன் இன்னொரு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் அவள் அடுத்த நாளே மறுமணம் செய்ய முடியாது. சில நாட்கள் திருமணத்தை ஒத்திப் போட வேண்டும். மறுமணத்தை ஒத்திப்போடும் காலமே இத்தா எனப்படுகின்றது.

எவ்வளவு காலம் திருமணத்தை ஒத்திப்போட வேண்டும் என்பது பல விதங்களில் வித்தியாசப்படும்.

கர்ப்பிணிகள் (மறுமணத்திற்காக) காத்திருக்கும் காலம் அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.
(அல்குர்ஆன் 65:4)

கணவனை இழக்கும்போது அவள் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் எட்டு மாதங்கள்) அவற் மறுமணம் செய்யலாகாது. கணவனை இழக்கும் போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் ஏழெட்டு நாட்கள்) அவள் மறுமணம் செய்யலாகாது.

கணவனை இழக்கும் சமயத்தில் அவள் கர்ப்பிணியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருந்தால் அவள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டம் முடியும் போது அவள் கர்ப்பிணியாக இல்லை என்று உறுதியானால் உடனே அவள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்தக் காலகட்டம் முடிவுறும் போது அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தால் அவள் பிரசவிக்கும் வரை மீண்டும் திருமணத்தை தாமதப்படுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் யாவும் 65:4 வசனத்தையும் 2:234 வசனத்தையும் ஆராய்ந்தால் விளங்கும்.

இந்தக் காலகட்டம் பெண்ணுக்கு வித்தியாசப்படுவதைக் கவனிக்கும் போது இத்தாவின் நோக்கம் என்ன என்பது தெரியும்.

அதாவது ஒருவனுடைய கருவைச் சுமந்து கொண்டு அடுத்தவனை மணக்கக் கூடாது. கரு வளர்கிறதா இல்லையா என்று சந்தேகமான நிலையிலும் அடுத்தவனை மணக்கக் கூடாது. முதல் நிலையில் இறந்தவன் துரோகம் செய்யப்படுகிறான். இரண்டாம் நிலையில் புதிய கணவன் ஏமாற்றப்படுகிறான். எல்லா வகையிலும் ஏமாற்றுவதைத் தடை செய்த இஸ்லாம் இங்கேயும் அதற்குத் தடை விதித்திருக்கின்றது.

ஒருவன் தன் மனைவியுடன் சேர்ந்து அவள் கர்ப்பிணியாக காரணமாக இருக்கிறான். அவளது கருவறையில் வளரும் தனது குழந்தையை அவள் வளர்ப்பால் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் இதற்கு உடன்பட்டே அவனுடன் இணைகிறாள். இதைப் பச்சையாக சொல்லாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்திலேயே இது அடங்கி விடுகின்றது.


இந்த நிலையில் அவன் இறந்து விடும்போது அவனது குழந்தையைப் பெற்றெடுப்பதும், அதற்கு இடையூறு ஏற்படாமல் காப்பதும் அவளது கடமையாகின்றது. அவள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மற்றொருவனை மணக்கும் போது அந்த குழந்தை பாதுகாப்பற்ற நிலைக்கு வருகிறது.

கர்ப்பிணியா இல்லையா என்று தெரியாத நிலையில் கணவனை இôந்த உடனே அவள் மறுமணம் செய்தால் ஒருவேளை முதல் கணவன் மூலம் குழந்தை உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் தனக்குச் சம்பந்தமில்லாத குழந்தைக்கு மற்றொருவன் தந்தையாக்கப்படும் மோசடி ஏற்படுகின்றது. இவனது சொத்துக்களுக்கு இவனுக்குப் பிறக்காதவன் வாரிசாகும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற நிலையை நீக்கி, உயர்வான நோக்கங்கள் இத்தாவின் பின்னே இருப்பதை சிந்திக்கும் போது விளங்கலாம்.

அப்படியானால் குழந்தை பெற முடியாத முதிர் வயது அடைந்தவளும், கணவனுடன் நீண்ட நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தவளும் ஏன் இத்தா இருக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும்.

"இத்தா' என்றால் மறுமணம் செய்வதை தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். முதிர் வயதுடையவள் எப்போதுமே மறுமணம் செய்யப் போவது கிடையாது என்பதால் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் மறுமணம் செய்யக் கூடாது என்பதால் அவளுக்கு எந்த இடையூறும் கிடையாது.

அவள் மறுமணத்தை விரும்பக் கூடியவளாக இருந்தால் அந்த வயதிலும் அப்போது இந்தக் காலக்கெடு அவசியமாகி விடுகின்றது. இல்லற வாழ்வில் தேற்றம் இருக்கும். அவள் குழந்தை பெறுவதற்கும், முதல் கணவன் மூலம் கருத்தறிப்பதற்கும் சாத்தியம் ஏற்பட்டு விடுகின்றது. இவள் வயதில் முதியவளாக இருந்தாலும் உடற்கட்டிலும் உணர்விலும் முதியவள் அல்ல. "இத்தா' என்பதை இருட்டறையில் அடைந்து கிடப்பது என்று சிலர் விளங்கியதால் கிழவிக்கு ஏன் இத்தா? என்கின்றனர்.

இத்தா என்றால் உடனே மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்தும் காலமே என்பதை விளங்கிக் கொண்டால் அந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிவிடும்.

எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாவிட்டால் ஏற்படும் மோசமான விளைவையும் சிந்திக்க வேண்டும்.

உடனேயே மறுமணத்தை விரும்பும் ஒருத்தி, தான் மாதவிடாய் நிற்கும் வயதை அடைந்து விட்டதாக பொய் சொல்லலாம். அதை மறுக்க வழியேதும் இராது. ஏனெனில் இந்தப் பருவம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக்கூடியது.

அல்லது ஒரு பெண் விதிவிலக்காக முதிர் வயதிலும் தாயாகி விடக்கூடும். உலகில் ஆங்காங்கே இது நடக்கத் தான் செய்கிறது. இப்படி விதிவிலக்காக முதல் கணவன் மூலம் முதிர் வயதில் அவள் கருத்தரித்திருந்தால் இரண்டாவது கணவன் ஏமாற்றப்படுகிறான். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் "இத்தா' இருக்க வேண்டுமென இஸ்லாம் சட்டத்தைப் பொதுவாக்கியது. கணவனுடன் நீண்ட நாட்களாக உறவு இன்றி இருந்தவள் ஏன் இத்தா இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். அதுவும் நிரூபிக்க முடியாததாகும். இதில் சலுகை வழங்கினால் அவசரத் திருமணத்திற்கு ஆசைப்படும் பெண் தனக்கு கணவருடன் பல ஆண்டுகள் உறவு கிடையாது என்று கூறலாம். இதை மறுக்க எந்த வழியும் இல்லாது போகும். இது போன்ற ஓட்டைகள் சட்டத்தில் இருந்தால் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவிடும் என்பதை நாம் விளங்கலாம். இந்தக் காரணங்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவை அல்ல. நாம் சிந்திக்கம் போது தோன்றியவை. காரணங்கள் நமக்குத் திருப்தியளிக்காவிட்டாலும், காரணமே நமக்குத் தெரியாவிட்டாலும் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.

"இத்தா' என்றால் மறுமணம் செய்வதைத் தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்பே நாம் கூறியுள்ளோம். அவள் மறுமணம் செய்யாமலும், அந்தக் காலகட்டத்தில் திருமண எண்ணத்தை ஏற்படுத்தும் அலங்காரகங்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும். அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்லக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. வீட்டுக்குள்ளே இருட்டறையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதும் இத்தாவின் அர்த்தமில்லை.

தலாக் விடப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இந்தக் கட்டத்தில் சர்வ சாதாரணமாக வெளியே வருகின்றனர். ஆனால் கணவன் இறந்த பிறகு இத்தா இருக்கும் போது மார்க்கம் கூறாத கட்டுப்பாடுகளை விதித்து விட்டனர்.
தலாக் விடப்பட்டவர்களுக்கு கணவன் இத்தா காலத்தில் செலவு செய்யக் கடமைப்பட்டுள்ளான். வெளியே செல்வதை அவன் தடுப்பதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் கணவனை இழந்தவளை அப்படித் தடுக்கத் தேவையில்லை.

அதையே அனுமதிப்பவர்கள் இதை மறுப்பது தான் விந்தையாக உள்ளது. இத்தா இருப்பவள் அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.