Sunday, October 11, 2009

பெண்களுக்கு பர்தா பாதுகாப்புக் கவசமா?


ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்ற இந்த சகோதரிக்கு இந்த ஆடை என்ன தடையாகவா இருந்தது?


(நபியே!) முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதை தவிர (வேறு எதையும் வெளிக்காட்டலாகாது)தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் முஃமினான பெண்கள் தன் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் பெண்களைவிரும்பமுடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்கள் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களை தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக்கூடாது. தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்க தங்கள் கால்களை தட்;டித் தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமீன்களே இதில் உங்களிடம் ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் நீங்கள் தவ்பா செய்து பிழைபொருக்கத் தேடி, நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன் - 24 : 31

நபியே நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளும்படி கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன் அல்குர்ஆன் 33: 59

நபியின் மனைவிகளே நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். அறியாமைக் காலத்து பெண்களைப் போல அலைந்து திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைபிடித்து தொழுங்கள். ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுடைய தூதருக்கும் கீழப்படியுங்கள். நபியின் வீட்டை உடையவர்களே உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி உங்களை பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் : 33 :33

இறைவன் இந்த உலகில் ஆணையும், பெண்ணையும் ஜோடியாக படைத்துள்ளான். அவர்கள் தங்களை தவறான பாதையை விட்டும் தடுத்துக்கொள்ள முஃமினான ஆண்களிலும், பெண்களிலும் தகுதியுள்ளவர்களுக்கு திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. அதில் அவனே அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக கூறுகிறான். இதிலிருந்து உடல் கவர்ச்சியின் ஆபத்தை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

இன்று உலகில் உடல் கவர்ச்சி ஏற்படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே. இதுவே மனிதர்களின் மனதில் சந்தேகங்களையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. ஷைத்தான் மனிதனுக்கு பரம எதிரியாய் இருக்கிறான். அவன் மனிதர்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றான்.

பெண்களுக்கு ஆடை குறைப்பு கலாச்சாரத்தை இன்று நாகரிகம் என்ற பெயரிலும், கலாச்சாரம் என்ற பெயரிலும், உண்டாக்கியதின் விளைவு. பெண்களை போகப்பொருளாக பார்க்கப்படுகிறார்கள், இதற்கு இந்த கேடு கெட்ட ஆடை குறைப்பு கலாச்சாரமே காரணம்.

மனித சமூகத்தில் உலவ எல்லா சமூகமும் ஆண் பெண் இருபாலர் அணிகின்ற ஆடையின் அளவை வகுத்துள்ளனர். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வகுத்துள்ள ஆடையானது தன் உடல் கவர்ச்சி(அங்கஅவையங்கள்) வெளியில் தெரியாதவண்ணம் முகம், கைகளைத்தவிர மற்ற பாகங்களை மறைக்கும் முகமாக அமைகின்ற ஆடையே பர்தாவாகும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: இருவர் நரகவாசிகளாவர். அவர்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. முதலாமவர்கள்;, மாட்டின் வாலைபோன்ற சவுக்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி அதிகாரம் செய்பவர்கள். இரண்டாம் வகுப்பினர், அரை குறை ஆடையணிந்து நிர்வாணமாக காட்சியளித்து, நடக்கும்போது ஒய்யார நடை நடந்து, அடுத்தவர்களை கிரங்கடித்து, தலையை தாழ்த்தி நடக்காது தன் அழகை காட்டவேண்டும் என்பதற்காக தலையை தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்கள். இவர்கள் இருவரும் சுவனத்தில் நுழையவே முடியாது. அன்றியும் அதன் வாடயைக்கூட நுகரமுடியாது. அவர்களை விட்டும் சுவனத்தின் வாடை பல மைல்களுக்கப்பால் இருக்கும். அறிவிப்பாளர்: அப+ஹ{ரைரா, ஆதாரம்: முஸ்லிம்.

பெண்களின் உரிமைமையைப் பேணுவதில் இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம்;போல் வேறு எந்தமதத்திலும் காண இயலாது. இன்று பெண்ணுரிமை பேசுபவர்கள், இவ்வுலகில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, முறைகேடான குழந்தை பிறப்பு, விபச்சாரம் போன்ற, பெண்களுக்கு கொடுமைகள் ஏற்படும் போதும் அவர்களின் உரிமைகள் மீரப்படும்போதும் பெரும்பாலும் அவர்களை கைவிட்டுவிடுவதைத்தான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் இஸ்லாம் ஒன்றே பெண்ணுரிமையையும், பெண் பாதுகாப்பையும் ஒருங்கே அளிக்கிறது. அதற்கான ஒரு சான்றுதான் பர்தா.

பர்தா அணிந்த பெண்கள் தங்கள் உலக கடமைகளை, பாதுகாப்போடு செயல்படுத்த முடியும். புதிய கலாச்சாரம் என்று பேசும் மேலை நாடுகள்கூட பர்தாவை உணரத் துவங்கியுள்ளதையும் அங்குள்ள பெண்களிடமிருந்து பர்தாவுக்கான ஆதரவுக்குரல் ஓங்கிஒலிப்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்

2 comments:

  1. நண்பரே இஸ்லாத்தை எதிர்க்கிறேன் என நினைக்காதீர்கள்!

    நியாயமான அளவு உடல் மறைக்கும் ஆடைகளிருந்தால் போதாதா ?

    நிச்சயம் பர்தா தான் அணிய வேண்டுமா?

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் எதிர்கட்சி அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!

    உங்களை இஸ்லாத்தை எதிர்ப்பவர் என்று நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் தவறாக ஏதும் கேட்கவில்லை.

    விசயத்திற்கு வருவோம் இன்று சினிமாக்களில் பெண்களை ஆடைக்குறைத்து காட்டினால்தான் அது வருமானத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

    இறைவன் ஆண்களை விட பெண்களை கவர்ச்சியாக படைத்திருக்கிறான் உதாரணத்திற்கு ஒரு ஆண் வெறும் ஜட்டியோடு வரும் காட்சியை யாரும் கவர்ச்சி என்று சொல்வார்களா?இதே ஒரு பெண் அவ்வாறு வரக்கண்டால் திரையரங்குகளில் elum கர ஒளியை கண்கூடாக கண்டிருக்கிறோம்.இது நிதர்சனமான உண்மை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    நீங்கள் சொல்லும் நியாயமான அளவு உடை என்பது என்ன?
    உடலுக்கு அணிந்திருக்கும் உடையில் ஒரு நியாயமான அளவு கீழ் பகுதியில் உடை குறைத்தால் தொப்புள் தெரியும்.

    அதே உடையில் மேல் பகுதியில் ஒரு நியாயமான அளவு உடை குறைத்தால் மார்பு தெரியும்.

    கால்கள் வரை அணிந்திருக்கும் உடையில் ஒரு நியாயமான அளவு உடை குறைத்தால் முன்னங்கால் தெரியும்.

    இதுதானே நீங்கள் சொல்லும் நியாயமான ஆடைக்குறைப்பு என்பது?

    இஸ்லாத்தின் பார்வையில் இந்த நியாயமான அளவு ஆடை குறைப்பு என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

    இந்த நியாயமான ஆடை குறைப்பினால் வெளிப்படும் பகுதிகள் யாவும் ஒரு பெண்ணின் கணவன் மட்டுமே கண்டு ரசிக்க வேண்டிய பாகங்களாகும்.

    மேலும் கண்டிப்பாக புர்க்காதான் அணிய வேண்டும் அவசியம் இல்லை.தாங்கள் இஸ்லாமிய ஆடை என்பதை இன்று இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்க்கா என்கிற கருப்பு நிற ஆடை மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது.

    இன்று நமது நாட்டில் பெரு நகரத்தின் கல்லூரி பெண்கள் அணியும் சுடிதார் என்கிற ஆடையும் கூட இஸ்லாமிய ஆடை தான் அதில் தலை மறைத்திருக்க வேண்டும்.
    இந்த சுடிதாரில் என்ன அநியாயம் இருக்கிறது சொல்லுங்கள்.

    இது போன்ற ஆடைகளால் இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்துகிறதே தவிர ஒரு போதும் களங்கப்படுத்தியது இல்லை.

    ReplyDelete