Tuesday, June 30, 2009

மரியாதைக்காகவும் ஆசீர்வாதம் பெறுகிறோம் என்றும் பிறர் காலில் விழுவது இஸ்லாத்தில் கூடுமா?




பிறர் காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ""இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ""நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ""(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். ""மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ""ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ""எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

786 இந்த எண்ணுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம் இதை இஸ்லாமியர்கள் பயன் படுத்துவது ஏன்?



786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.

“"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாக கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார்.அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும் முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் “"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் “"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

Friday, June 26, 2009

இஸ்லாமியர்கள் வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து வீடு கட்டுவது கட்டிய வீட்டை மாற்றி அமைப்பது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?


இஸ்லாத்தின் பார்வையில் வாஸ்த்து சாஸ்த்திரம்?

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல வாஸ்த்து சாஸ்த்திரத்தை நம்பும் எல்லோருமே அறிவீனர்கள் தான்.


முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை # தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் "இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இதுதான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

""ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!'' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?

நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங் கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப் படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக் குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். முஸ்லிம்கள் கணக்கில் உலகில் தான் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்-ம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

Monday, June 22, 2009

குர் ஆன் அரபி மொழியில் வழங்கப்பட்டதன் காரணம் என்ன? ஏன் அரபி மொழிக்கு மட்டும் அந்த சிறப்பு?


திருக் குர்-ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

மனிதர்களில்ருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(குர்ஆன் 14:4)

ஈசா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.

(நூல்: அஹ்மத் 22391)

Monday, June 15, 2009

காஃபத்துல்லாவை காப்பதற்க்காக இறைவன் அனுப்பிய அபாபீல் பறவையை பாபர் மஸ்ஜிதை இடிக்கும்போது இறைவன் ஏன் அனுப்பி வைக்க வில்லை?

பாபரி மஸ்ஜிதை காக்க, காஃபத்துல்லாவை காத்த அபாபீல் பறவை ஏன் வரவில்லை?
இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.
கஃபாவும் அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஃபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று திருமறைக் குர்ஆன் உறுதி மொழி அளிக்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(திருக் குர்ஆன் 28:57)

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
(திருக் குர்ஆன் 29:67)

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள் ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(திருக் குர்ஆன் 3:97)

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
(திருக் குர்ஆன் 14:35)

யுக முடிவு நாளின் போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஃபாவை அழிப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன் அறிவிப்பு உள்ளது. (புகாரி 1591, 1596, )

அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஃபாவைத் தகர்க்க முயன்றால் யானைப் படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். ( 22:40)

பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.

ஆனால் அநியாயமாக இறையில்லங்களை இடித்தவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் இழிவு காத்திருக்கிறது.இறைவனின் பிடி மிகவும் மோசமானது.

Sunday, June 14, 2009

கடலில் இறந்து போனவர்களுக்கு கப்ரு வேதனை உண்டா?

கடல் பயணத்தில் இறந்தவர்கள் மட்டுமல்ல, உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர். காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்ய இறைவன் காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் அவனது நியாயத்லிதிற்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரைமறை (வாழ்க்கை) உண்டு. என்ற (அல்குர்ஆன்) வசனப்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

மேலும் கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அதே இடத்தில் தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்மாக்கள் மரணிக்கும் போதும், மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின் போதம், அல்லாஹ் கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தன் வசம் வைத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையும் வைத்துள்ளான் என்பது தெளிவு. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும் கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழ மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே. இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.

யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ அவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் மரணிக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது அவனுக்குச் சிரமமல்ல.கடலில் மீன் தின்று விழுங்கினாலும் கூட தவறு செய்திருந்தால் இறைவனின் வேதனையிலிருந்து தப்பமுடியாது.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்வி-ருந்து எவரும் விதிவிலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

Saturday, June 6, 2009

மரியாதை என்ற பெயரில் மனிதன் மனிதனுக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்தலாமா


மரியாதை நிமித்தமாக பிறருக்காக எழுந்து நிற்கலாமா?




வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம்.

மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப் பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸýபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ""அமருங்கள்'' என்றனர். ""தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ர-) கூறினார்கள்.

நூல்கள்: திர்மிதி 2769 அபூதாவூத் 4552


மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ""பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்
.

யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நான் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

Tuesday, June 2, 2009

அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் என்கிறீர்கள் அப்பேற்பட்ட வல்லமையுடைய இறைவனுக்கு வானத்தையும் பூமியையும் படைக்க ஏன் ஆறு நாள் தேவைப்பட்டது?


வானத்தையும், பூமியையும் படைக்க அல்லாஹ் ஆறு நாள் எடுத்தது ஏன்?

சரியான முறையில் புரிந்து கொண்டால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள். ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் நினைத்தால் இரண்டே மாதத்தில் கட்டி விடக்கூடிய அளவுக்குச் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் சக்தி இருந்தும் ஒரு வீட்டை இரண்டு வருடங்களில் கட்டுகிறீர்கள் என்றால் இரண்டு மாதங்களில் உங்களால் கட்ட முடியாது என்று கூற மாட்டோம்.

ஒரு நாளில் நம்மால் செய்ய முடியும் காரியத்தை ஐந்து நாட்களில் செய்தால் ஒரு நாளில் செய்ய நமக்குச் சக்தியில்லை என்று கூற முடியாது.

ஐம்பது கிலோ எடையைத் தூக்க முடிந்த நீங்கள் ஐந்து கிலோவாக பத்து தடவை தூக்கினால், உங்களுக்கு ஐம்பது கிலோவைத் தூக்க முடியாது என்று யாரும் கருத மாட்டார்கள்.

எந்த மனிதரும் தனக்கு எதையெல்லாம் செய்ய சக்தியுள்ளதோ அதையெல்லாம் செய்ய மாட்டார். தனக்கு எது விருப்பமானதோ அதைத் தான் செய்வார்.

அது போல தான் இறைவன் ஒரு பொருளை உருவாக்க எண்ணினால் ஆகு என்றாலே போதும்; அது ஆகிவிடும் என்பது அவனது சக்தியையும் ஆற்றலையும் கூறுகிறது. ஒவ்வொரு பொருளையும் ஆகு என்று கூறித் தான் படைத்தான் என்பது இதன் கருத்தல்ல. படைக்க அவனுக்கு முடியும் என்பது தான் இதன் கருத்து.

ஆயினும் ஒரு மனிதனை உருவாக்க அவன் பத்து மாதங்கள் எடுத்துக் கொள்வான். வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்களை எடுத்துக் கொள்வான். இதை விட அதிகமான கால அவகாசத்திலோ, குறைவான கால அவகாசத்திலோ வேறுசில காரியங்களைச் செய்வான். இப்படிச் செய்வதால் ஆகு எனக் கூறினால் ஆகும் என்ற அவனது வல்லமையை மறுத்ததாக ஆகாது.


வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? (குர்-ஆன் 32:4)