Tuesday, July 28, 2009

குர்-ஆனில் இதயமே சிந்திப்பது போல் பல இடங்களில் வருகிறதே சிந்திப்பது எது மூளையா? இதயமா?


சிந்திப்பது எது மூளையா? இதயமா?

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?’என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.

சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதி-ருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உட-ன் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

""இதயத்தில் உனக்கு இடம் இல்லை'' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கே- செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.

இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், "மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் "கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிசானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி # உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

Tuesday, July 21, 2009

இஸ்லாமியர்களை மறுமை நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கும் சூரிய கிரகணம்




இஸ்லாத்தின் பார்வையில் சூரிய கரகனம்




சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும்.


கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்;
*சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ]
*நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ]
கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ]


கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும்.
*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ]


*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ]


கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்;
தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ]


ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்;
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ]


தொழும் முறை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ]


கிரகணம் விலகும் வரை தொழுதல்;
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ]
உரை நிகழ்த்துதல்;


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ]


அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக!

Sunday, July 12, 2009

அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


இறைவனை அவன் இவன் என்று சொல்லலாமா?




இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

"அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் "ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

"அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு "ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக "ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.


அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் "ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ'’என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது ""பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது'' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் "HE" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு "THEY" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக "THEY" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி "அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.

மரியாதை கொடுக்காத போது அவன் எனவும்,

மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும்,

அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும்
பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் "அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான்

கம்பன் கூறுகிறான்

ராமன் வில்லை ஒடித்தான்

என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது "அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது "நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது "அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.

கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

கடவுளை "அவன்' என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்திற்காகவும் முஸ்லிம்கள் இறைவனை "அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

""அல்லாஹ் கூறினார்கள்'' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.


அல்லாஹ்வை "அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.

மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை "அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.


அல்லாஹ்வை "அவர்' என்றோ "நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

Saturday, July 4, 2009

இஸ்லாத்தின் பார்வையில் ஓரினச்சேர்க்கை


ஓரினச்சேர்க்கை ஓர் அலசல்!

ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி,இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]

இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَநிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]

அழிக்க வந்த அமரர்களையும்[வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;

ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌஅவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]

قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ

அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)

மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍபின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)

மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும்.